செய்திகள்
மைக் ஹஸ்சி

மைக் ஹஸ்சியை கவர்ந்த 11 எதிரிகள்

Published On 2020-04-30 05:32 GMT   |   Update On 2020-04-30 05:32 GMT
தனக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் வீரர்களில் இருந்து மிகச்சிறந்த 11 எதிரிகளை மைக் ஹஸ்சி தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி. 2005-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அந்த அணிக்காக 79 டெஸ்ட் போட்டியில் விளையாடி 19 சதம் உள்பட 6,235 ரன்கள் சேர்த்து இருக்கிறார். தனக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் வீரர்களில் இருந்து மிகச்சிறந்த 11 எதிரிகளை அவர் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரை கவர்ந்த எதிரி வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), கிரேமி சுமித், காலிஸ், ஸ்டெயின், மோர்னே மோர்கல் (4 பேரும் தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா, முரளிதரன் (இலங்கை), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோருக்கும் ஹஸ்சி இடம் வழங்கியுள்ளார். இது குறித்து 44 வயதான ஹஸ்சி கூறுகையில், ‘விக்கெட் கீப்பர் இடத்திற்கு சங்கக்கரா, டோனி, டிவில்லியர்ஸ் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய நான் மல்லுக்கட்ட வேண்டி இருந்தது. டோனி, டிவில்லியர்சை பொறுத்தவரை 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் சங்கக்கரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கினேன்’ என்றார்.

இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தன்னுடன் ஆடிய மற்றும் தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த லெவன் அணியை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் சங்கக்கரா (இலங்கை), பிரெட் லீ (ஆஸ்திரேலியா) தவிர மற்ற 9 பேரும் தென்ஆப்பிரிக்க நாட்டவரே இடம் பிடித்துள்ளனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒரு இந்தியருக்கு கூட அவர் தனது கனவு அணியில் இடம் கொடுக்கவில்லை.
Tags:    

Similar News