செய்திகள்
ஹனிஃப் முகமது உயர் செயல்திறன் மையம்

கராச்சி உயர் செயல்திறன் மையத்தை மருத்துவ ஊழியர்கள் தங்கும் விடுதியாக மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சம்மதம்

Published On 2020-03-24 10:18 GMT   |   Update On 2020-03-24 10:18 GMT
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள் தங்குவதற்காக கராச்சி உயர் செயல்திறன் மையத்தை கொடுக்க கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகளவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாகிஸ்தானில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ ஊழியர்கள் வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு வந்து மீண்டும் வீடுகளுக்கு செல்வது கடினமாக உள்ளது.

இதனால் சிந்து மாகாண அரசு கராச்சியில் உள்ள ஹானிஃப் முகமது உயர் செயல்திறன் மையத்தை தற்காலிகமாக மருத்துவ ஊழியர்கள் தங்குவதற்கான விடுதியாக மாற்றித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்று விடுதியாக மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது.

‘‘இந்த சவாலான மற்றும் கடினமான நேரத்தில் மருத்துவ ஊழியர்கள்தான் நமது ஹீரோக்கள். கொரோனா வைரசால் அவர்கள் மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற தங்கள் உயிர்களை பணயம் வைத்து கடினமாக உழைத்து வருகிறார்கள்.

ஹனிஃப் முகமது உயர் செயல்திறன் மையத்தை தற்காலிக விடுதியாக மாற்ற மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்கிறது. இங்கிருந்து அவர்கள் இன்னும் அதிகமான வகையில் பணியாற்ற முடியும்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News