செய்திகள்
மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவிக்கு ஸ்டீவ் ஸ்மித் சரியான நபர் அல்ல: மைக்கேல் கிளார்க்

Published On 2020-03-03 13:28 GMT   |   Update On 2020-03-03 13:28 GMT
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சரியான நபராக இருப்பார் என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டது. இதனால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. கேப்டனாக பொறுப்பேற்க இரண்டு வருடம் தடைவிதிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டனாக உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேட் கம்மின்ஸ்தான் கேப்டனுக்கு சரியான நபர் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘கம்மின்ஸ் போட்டியை சிறப்பான வகையில் அறிந்து கொள்கிறார். அவர் தொடக்க பந்து வீச்சாளர், ஆனாலும் அவரால் பேட்டிங்கும் செய்ய இயலும். பீல்டிங்கில் தலைசிறந்தவர். கேப்டனுக்கு என்ன தேவையோ? அதை அவர் போட்டியில் காண்கிறார்.

மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டால் விரும்புவேன். பந்து வீச்சாளரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஏராளமான பேச்சுகள் நடக்கின்றன. ஏனென்றால் பொதுவாக பந்து வீச்சாளர்கள் காயம் அடைவார்கள். ஆனால் சிறந்த உடற்தகுதியுடன் இருப்பதை பேட் கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். அவரால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடியும்.

ஆஸ்திரேலியாவில் சிறந்த வீரர் கேப்டனாக வேண்டும் என்பது நடைமுறை. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மித் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவிக்கு அவர் சரியான நபராக இருப்பார் என நினைப்பது அவசியமில்லை’’ என்றார்.
Tags:    

Similar News