செய்திகள்
இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து யுனிட்டில் சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்கிறார் விராட் கோலி

Published On 2020-03-03 12:09 GMT   |   Update On 2020-03-03 12:09 GMT
இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு குழுவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கடந்த சில வருடங்களாக இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடி வருகிறது.

இதில் இஷாந்த் சர்மாவுக்கு 32 வயதும், உமேஷ் யாதவுக்கு 33 வயதும், முகமது ஷமிக்கு 29 வயதும், புவனேஷ்வர் குமாருக்கு 30 வயதும் ஆகிறது. பும்ராவுக்கு 26 வயதாகிறது.

இந்த ஐந்து பந்து வீச்சாளர்களில் நான்கு பேரை வெளிநாட்டு தொடருக்கு இந்திய அணி அழைத்துச் செல்லும். ஆனால் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டால் சிக்கலாகி விடும். இங்கிலாந்து தொடரின்போது புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரால் விளையாட முடியவில்லை.

தற்போது முடிந்த நியூசிலாந்து தொடருக்கு புவனேஷ்வர் குமார் தயாராகவில்லை. நன்றாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் அவர் இருந்திருந்தால் போட்டி நிச்சயமாக மாறியிருக்கும். முதல் போட்டியில் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசினார்.

ஆனால் 2-வது டெஸ்டுக்கு முந்தைய நாள் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்விங் ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் மன்னர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவால் புதுப்பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

தற்போது அவர்களுக்கு வயதாகி கொண்டே வருவதால் வேகப்பந்து வீச்சு யுனிட்டில் சிறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போது விளையாடி வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் இளம் வயதை கொண்டிருக்கவில்லை. ஆகவே இதை கவனமாகவும், விழிப்புடனும் கையாள வேண்டும். இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்து அவர்களை எப்போது வேண்டுமென்றாலும் களத்தில் விளையாட வைக்க தயாராக இருக்க வேண்டும்.

அடுத்த மூன்று அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது அவசியம். சில வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியும்.

கிரிக்கெட்டில் மாற்றம் என்பது நடைபெறும் நிகழ்வுதான். அந்த சிறிய மாற்றங்கள் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும். அதைப்பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். தனிப்பட்ட முறையில் ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கையை நசுக்க முடியாது. அவர்கள் சிறப்பாக விளையாடும்போது, மாற்று வீரர்கள் தேவையில்லை. இந்த மாற்றங்கள் நடக்கும் என்பது எங்கள் அணியில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நவ்தீப் சைனி எங்களது திட்டத்தில் உள்ளார். இன்னும் இரண்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மீது பார்வை உள்ளது. அவர்ளின் விளையாட்டு தரம் சர்வதேச அளவில் மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். அதை கவனமாக கையாள்வது அவசியம்’’ என்றார்.
Tags:    

Similar News