செய்திகள்
வங்காளதேசம் அணி வீரர்கள்

U19 உலக கோப்பை: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வங்காளதேசம்

Published On 2020-01-31 07:49 GMT   |   Update On 2020-01-31 07:49 GMT
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வங்காளதேசம்.
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணியுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. தன்ஸித் ஹசன் (80 ரன், 12 பவுண்டரி), டவ்ஹித் ஹிரிடோய் (51 ரன்), ஷஹதத் ஹூசைன் (74 ரன், 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி வங்காளதேச சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. லுக் பியூபோர்ட் (60 ரன்), ஜோனதன் பேர்டு (35 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

முடிவில் தென்ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 157 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரகிபுல் ஹசன் 9.3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஏற்கனவே நடப்பு சாம்பியன் இந்தியாவும், நியூசிலாந்தும் அரைஇறுதிக்கு முன்னேறி விட்டன.

இன்று நடக்கும் 4-வது கால்இறுதியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. மொத்தம் 3 ஆசிய அணிகள் அரைஇறுதியை எட்டுவது உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News