செய்திகள்
ரோகித் சர்மா, கேஎல் ராகுல்

சூப்பர் ஓவரில் உலக சாதனைப் படைத்த இந்திய அணி

Published On 2020-01-30 12:01 GMT   |   Update On 2020-01-30 12:01 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியின் சூப்பர் ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் உலக சாதனைப் படைத்துள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்கள் அடித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் (95) சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி சென்றது.

ஆனால் கடைசி ஓவரை முகமது ஷமி சிறப்பாக வீச நியூசிலாந்து அணியும் 179 ரன்களே அடித்தது. போட்டி சமனில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் அடித்தது. பின்னர் 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முதல் நான்கு பந்தில் 8 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மா கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். இதனால் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் சூப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்து முன் 2012-ல் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்திருந்தது.
Tags:    

Similar News