செய்திகள்
இந்திய அணி கேப்டன் விராட் கோலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு

Published On 2020-01-21 08:42 GMT   |   Update On 2020-01-21 08:42 GMT
இந்திய அணி கேப்டனான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி (121 புள்ளிகள்) தனது 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி (886 புள்ளிகள்), ரோகித் சர்மா (868 புள்ளிகள்) முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். பாபர் அசாம் (பாகிஸ்தான்), 3-வது இடத்திலும், டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) 4-வது இடத்திலும், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) 5-வது இடத்திலும் தொடருகின்றனர்.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜோ ரூட் (இங்கிலாந்து) 8-வது இடத்திலும், குயிண்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா) 9-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர்கள் ஷிகர் தவான் 7 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 21 இடம் முன்னேறி 50-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் சுமித் 4 இடம் உயர்ந்து 23-வது இடத்தையும், அலெக்ஸ் கேரி 2 இடம் முன்னேறி 31-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா (இந்தியா), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 6-வது இடத்தையும், பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் ஒரு இடம் உயர்ந்து 7-வது இடத்தையும், நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்ரி ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், பெர்குசன் ஒரு இடம் உயர்ந்து 9-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 இடம் சறுக்கி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.
Tags:    

Similar News