செய்திகள்
ரோகித்சர்மா - விராட் கோலி - எம்எஸ் டோனி

கடந்த 10 ஆண்டுகளில் இவர்தான் சிறந்த கேப்டன் - கிரிக்கெட் இணையதளம் தேர்வு

Published On 2020-01-02 07:31 GMT   |   Update On 2020-01-02 07:31 GMT
கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் இந்திய வீரர்தான் சிறந்த கேப்டன் என கிரிக்கெட் இணையதளம் தேர்வு செய்துள்ளது.
புதுடெல்லி:

கிரிக்கெட் இணைய தளங்களில் மிகவும் பிரபலமான ‘கிரிக்இன்போ’ கடந்த 10 ஆண்டுகளில் (2010-2019) சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த கேப்டனாக டோனியை அந்த இணைய தளம் தேர்வு செய்துள்ளது. 2011-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று சாதித்தது. இதனால் அவரை சிறந்த கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறது.

அவர் இந்த 10 ஆண்டுகளில் 5640 ரன் எடுத்துள்ளார். 170 கேட்ச் பிடித்துள்ளார். 72 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவரான டோனி 20 ஓவர் ஆட்டங்களில் 5396 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.04 ஆகும். 154 கேட்ச் பிடித்துள்ளார். 77 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

கேப்டனாக மட்டுமின்றி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் அவர் விக்கெட் கீப்பராகவும் தேர்வாகி இருக்கிறார்.

ஒருநாள் போட்டி அணியில் மற்ற இந்திய வீரர்களில் விராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரும், 20 ஓவர் அணியில் விராட் கோலி, பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

விராட்கோலி ஒருநாள் போட்டியில் 11036 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் ஆட்டங்களில் 8000 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 135.40 ஆகும்.

ரோகித்சர்மா 7991 ரன் எடுத்துள்ளார். பும்ரா 174 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியை அந்த இணைய தளம் தேர்வு செய்துள்ளது. அவர் 7202 ரன் எடுத்துள்ளார். மற்ற இந்திய வீரர்களில் அஸ்வின் மட்டுமே இதில் இடம் பெற்றள்ளார். அவர் 362 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

விராட் கோலியை போலவே 3 வடிவிலான அணியிலும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டிவில்லியர்ஸ் தேர்வாகி உள்ளார்.

‘கிரிக்இன்போ’ கடந்த 10 ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள சிறந்த லெவன் (11 வீரர்கள்) வருமாறு:-

டெஸ்ட்: விராட் கோலி (கேப்டன்), அலிஸ்தர் குக் (இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர், தென் ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஹெராத் (இலங்கை).

ஒருநாள் போட்டி: டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா, விராட் கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ், டெய்லர் (நியூசிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்), போல்ட் (நியூசிலாந்து), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), இம்ரான்கான் தாகீர் (தென் ஆப்பிரிக்கா).

20 ஓவர் போட்டி: டோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், சுனில் நரீன் (வெஸ்ட் இண்டீஸ்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், பொல்லார்ட், ஆந்த்ரே ரஸ்சல், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்), மலிங்கா, பும்ரா (இந்தியா).
Tags:    

Similar News