செய்திகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மொத்த ஆட்டமும் பாகிஸ்தானில்... அட்டவணை வெளியீடு

Published On 2020-01-01 11:32 GMT   |   Update On 2020-01-01 11:32 GMT
இலங்கை தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் அங்குள்ள நான்கு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி வெளிநாட்டு வீரர்கள் விளையாட மறுத்து வந்தனர்.

இதனால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டு வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டின் பிற்பகுதி ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான போட்டிகள் பிப்ரவரி 20-ந்தேதி முதல் மார்ச் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் 34 போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் 9 போட்டிகளும், லாகூர் கடாஃபி மைதானத்தில் 14 போட்டிகளும், முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 36 நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 22 நாடுகளில் இருந்து 425 வீரர்கள் 2020 தொடரில் விளையாட தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News