செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் பந்தை வீளாசிய காட்சி.

2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

Published On 2019-12-08 17:17 GMT   |   Update On 2019-12-08 17:17 GMT
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்த 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.

ரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார். ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. 

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், சிம்மோன்ஸ் மற்றும் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் அந்த ஜோடியில் லீவிஸ் 40(35) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ஹெட்மயர் 23(14) ரன்களில் கோலியின் சிறப்பான கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த சிம்மோன்ஸ் 38 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி, அணியினை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் தொடர்ந்து அதிரடி காட்டிய சிம்மோன்ஸ் 67(45) ரன்களும், நிகோலஸ் பூரன் 38(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.
Tags:    

Similar News