செய்திகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து டிக்ளேர்- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் திணறல்

Published On 2019-11-30 11:17 GMT   |   Update On 2019-11-30 11:17 GMT
அடிலெய்டு நகரில் நடந்துவரும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. 

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அபாரமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் லாபஸ்சாக்னே 162 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஸ்டீவ் சுமித் களமிறங்கினார். 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தனது முதல் முச்சதத்தை ருசித்தார். இதையடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 335 ரன்களுடனும், மேத்திவ் வேட் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுக்கள் விழ பாபர் அசாம் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிறிது சமாளித்து ஆடினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 42 ரன்களுடனும், யாசிர் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி 493 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
Tags:    

Similar News