செய்திகள்
எம்எஸ் டோனி, ரிஷப் பந்த்

ரி‌ஷப் பந்த், சாம்சன் செயல்பாடுகளை பார்த்து டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார்: லக்‌ஷ்மண்

Published On 2019-11-29 14:30 GMT   |   Update On 2019-11-29 14:30 GMT
ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் செயல்பாடுகளை பார்த்து எம்எஸ் டோனி ஓய்வு குறித்து முடிவு செய்வார் என விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி அரை இறுதியில் தோற்று வெளியேறிய பிறகு முன்னாள் கேப்டன் டோனி 3 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக கூறி போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இதனால் அவர் ஓய்வு முடிவை எடுப்பாரா? என்ற கருத்து நிலவுகிறது. இதற்கிடையே டோனி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபற்றி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும்போது, ‘‘டோனி ஓய்வு வி‌ஷயத்தில் ஐ.பி.எல். போட்டி முடியும் வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகுதான் 20 ஓவர் அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டோனி கூறும்போது ‘‘ஓய்வு குறித்து ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியதாவது:-

இளம் விக்கெட் கீப்பர்களான ரி‌ஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் செயல்பாடுகளை டோனி அடுத்த சில மாதங்களாக தீவிரமாக கண்காணிப்பார் என்று நம்புகிறேன். அவர்களது ஆட்டத்திறனை பார்த்து டோனி தனது முடிவை எடுக்கலாம்.

ரி‌ஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டத்தை பார்த்து டோனி பொறுமையுடன் காத்து இருப்பார் என்று கருதுகிறேன். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார். ஏனென்றால் டோனி ஐ.பி.எல். போட்டிக்காக தயாராகி கொண்டிருக்கிறார்.



இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எப்பொழுதெல்லாம் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News