செய்திகள்
காம்பீர் - விராட் கோலி

விராட்கோலி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த காம்பீர்

Published On 2019-11-28 07:15 GMT   |   Update On 2019-11-28 07:15 GMT
கங்குலி தலைமையில்தான் வெளிநாடுகளில் அதிக வெற்றி பெற்றதாக விராட் கோலி கூறியதற்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

கொல்கத்தாவில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “மன உறுதியை சோதிக்கும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட கற்றுக்கொண்டோம். கங்குலி கேப்டனாக இருந்த போதுதான் இது தொடங்கியது. நாம் அதை முன்னெடுத்து செல்கிறோம்” என்றார்.

விராட்கோலியின் இந்த கருத்துக்கு முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் பதிலடி கொடுத்து இருந்தார் அவர் கூறி இருந்ததாவது:-

கங்குலி கேப்டனாக இருந்த 2000 ஆண்டுகளில் தான் இந்தியா வெற்றி பெற தொடங்கியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய அணி 1970 மற்றும் 1980களில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுஉள்ளது. அப்போது விராட் கோலி பிறந்திருக்க மாட்டார். கடந்த 2000 ஆண்டுக்கு பிறகுதான் கிரிக்கெட் தொடங்கியதாக பலர் இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணி 1970களில் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற தொடங்கியது. 1986-ல் இங்கிலாந்து தொடரை வென்றது. இதுதவிர பல தொடரையும் டிரா செய்து இருக்கிறது.

இவ்வாறு கவாஸ்கர் கூறி இருந்தார்.

இந்தநிலையில் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்தும், கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்தும் முன்னாள் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான காம்பீர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அதே நேரத்தில் கங்குலி தலைமையில்தான் இந்திய அணி வெளிநாடுகளில் அதிகமான வெற்றிகளை பெற தொடங்கியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



கவாஸ்கர் அல்லது கபில்தேவ் அல்லது மற்ற கேப்டன்கள் காலத்தில் இந்திய அணி எப்போதுமே சொந்த மண்ணில்தான் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனால் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான் வெளிநாடுகளில் வெற்றி பெற தொடங்கினோம். அதிகமான வெற்றிகளை பெற்றோம். கங்குலி கேப்டனாக இருந்தபோது தொடங்கியதை நாம் முன்னெடுத்து செல்கிறோம் என்று விராட் கோலி கூறியிருப்பது வெளிநாடுகளில் பெற்ற வெற்றியைதான். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News