செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்

Published On 2019-11-18 08:11 GMT   |   Update On 2019-11-18 08:11 GMT
லக்னோவில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லக்னோவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.

3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்கின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஹஸ்ரதுல்லா சஜாய், ரஹ்மதுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஜாய் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஆனால் குர்பாஸ் 52 பந்தில் 79 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொதப்ப இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப்பை (46 பந்தில் 52 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொதப்ப வெஸ்ட் இண்டீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக் 3 விக்கெட் வீழ்த்தினார்.



கரிம் ஜனத் தொடர் நாயகன் விருதையும், குர்பாஸ் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர். இதற்கு முன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியிருந்தது. அதற்கு தற்போது ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
Tags:    

Similar News