செய்திகள்
சிட்சிபாஸ்

ஏ.டி.பி. உலக டென்னிஸ் - கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

Published On 2019-11-18 06:37 GMT   |   Update On 2019-11-18 06:39 GMT
ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ஆஸ்திரியா வீரரான டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
லண்டன்:

உலகின் ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச் சுற்று லண்டனில் நடந்தது.

இதன் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா)- ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினார்கள்.

முதல் 3 இடங்களில் உள்ள நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரை பின்னுக்கு தள்ளி விட்டு இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர்.

இதில் 21 வயதான சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டொமினிக் தீம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 35 நிமிட நேரம் தேவைப்பட்டது.

அவர் ஏற்கனவே அரை இறுதியில் ரோஜர் பெடரரை தோற்கடித்து இருந்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டெபானஸ் சிட்சிபாசுக்கு ரூ.9½ கோடி பரிசாக கிடைத்தது. ஏ.டி.பி. இறுதிச்சுற்று பட்டத்தை இளம் வயதில் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த பட்டத்தை பெற்ற முதல் கிரீஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த லைடன் ஹெவிட் 20 வயதில் இந்த படத்தை பெற்றிருந்தார்.

இந்த போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனாலும் இந்த ஆண்டின் இறுதிப்பட்டியலில் ரபெல் நடால் தொடர்ந்து ‘நம்பர் 1’ இடத்தில் உள்ளார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், பெடரர் 3-வது இடத்தில் உள்ளனர்.

இறுதிப்போட்டியில் விளையாடிய டொமினிக் தீம் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்தார். மெட்வதேவ் (ரஷ்யா) ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற சிட்சிபாஸ் 6-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News