செய்திகள்
விராட் கோலி, கவுதம் காம்பிர்

இந்த விஷயத்தில் கங்குலி, எம்எஸ் டோனியிடம் இருந்து விராட் கோலி மாறுபட்டவர்: கவுதம் காம்பிர்

Published On 2019-10-14 10:30 GMT   |   Update On 2019-10-14 10:30 GMT
கங்குலி, எம்எஸ் டோனி ஆகியோர் போட்டி டிராவில் முடிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை கொண்டவர்கள். ஆனால் விராட் கோலி இதில் மாறுபட்டவர் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியதன் மூலம் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

விராட் கோலி கடந்த 2014-ம் ஆண்டு எம்எஸ் டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்றுக் கொண்டார். கேப்டனாக பொறுப்பேற்றதும் வெற்றி என்பது மட்டுமே எனது குறிக்கோள். முடியாத கட்டத்தில் மட்டுமே டிரா குறித்து யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில் அணியைத் தேர்வு செய்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை ருசித்துள்ளது.

இந்தியாவின் வெற்றிக்கு கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரின் அணுகுமுறையை காட்டிலும் விராட் கோலியில் மாறுபட்ட அணுகுமுறைதான் காரணம் என காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் கேப்டன்ஷிப் திறன் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அவரின் பயமில்லாத அணுகுமுறை மற்றும் மனநிலை  டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க காரணமாக உள்ளது. வெளிநாட்டில் கூட அவர் தனிப்பட்டவராக திகழ்கிறார்.

தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்தால், நீங்கள் வெற்றி பெறவே முடியாது. தோல்வி குறித்து விராட் கோலி பயந்ததே கிடையாது. இது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. நாம் கங்குலி, எம்எஸ் டோனி, ராகுல் டிராவிட் குறித்து பேசுகிறோம். ஆனால், விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அதிக அளவில் வெற்றி வாகை சூடியுள்ளது.

மற்ற கேப்டன்களை விட கோலி அதிகமாக ரிஸ்க் எடுத்து வருகிறார். மற்றவர்கள் போட்டியில் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதற்காக கூடுதல் பேட்ஸ்மேனோடு விளையாடுவார்கள். விராட் கோலி மட்டும்தான் வெளிநாட்டு தொடரில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் (ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சேர்த்து) விளையாடுகிறார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் நான்கு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் களம் இறங்கினார். இதை சவாலாக ஏற்று வெற்றி பெற்றுள்ளார்’’ என்றார்.
Tags:    

Similar News