செய்திகள்

முதல் டி20 போட்டி - ஆஸ்திரேலியாவுக்கு 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

Published On 2019-02-24 15:16 GMT   |   Update On 2019-02-24 15:16 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அரை சதத்தால் இந்திய அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #INDvAUS
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் 3 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களில் தோனி மட்டும் தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. #INDvAUS
Tags:    

Similar News