செய்திகள்

ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி சிறந்தவர் - இயன் சேப்பல்

Published On 2019-01-21 07:39 GMT   |   Update On 2019-01-21 07:39 GMT
உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
புதுடெல்லி:

இரண்டு உலக கோப்பையை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ந்தவர் டோனி.

2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலககோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் 3 நிலைக்கு கேப்டனாக ஜொலித்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் மட்டும் ஆடி வந்தார்.

கடந்த ஆண்டு அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் உலககோப்பை அணியில் அவர் தேவையா? என்ற விவாதம் எழுந்தது.

ஆனால் இந்த ஆண்டு டோனியின் தொடக்கமே அமர்களமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற டோனியின் ‘பேட்டிங்’ முக்கிய பங்கு வகித்தது.

3 ஆட்டத்திலும் சேர்த்து 192 ரன்கள் குவித்தார். மூன்றிலும் அரைசதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் அவர் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

உலககோப்பை அணியில் அவர் இடம் பெறுவதை யாராலும் இனி தடுக்க இயலாது.

இந்த நிலையில் ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் இன்னும் உலகின் சிறந்த வீரராக டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர். டோனி ஆட்டத்தை முடிக்கும் திறமையில் இருக்கும் போது யாராலும் தடுக்க இயலாது.

அவரது ஷாட்டுகள் மிகவும் அதிரடியாக இருக்கும். அவர் தனது தந்திரமான ஆட்டத்தை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கையாள்வதை பலமுறை நிரூபித்துவிட்டார்.



ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 6-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வார். ஆனால் அவரையும் விட சிறந்தவராக டோனி இருக்கிறார்.

பெவன் பவுண்டரி மூலம் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார். டோனி சிக்கர் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற வைப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்க ஓடுவதில் டோனி வல்லவர். 37 வயதிலும் அவரால் ரன் எடுக்க வேகமாக ஓட முடிகிறது. ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவது காரணம். புள்ளி விவரப்படி டோனி தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் உலகின் சிறந்த வீரர்.

இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
Tags:    

Similar News