செய்திகள்

சிட்னி டெஸ்ட்: புஜாராவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 303/4

Published On 2019-01-03 08:31 GMT   |   Update On 2019-01-03 08:31 GMT
சிட்னி டெஸ்டில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், லாபஸ்சேக்னே ஆகியோர் இடம்பிடித்தனர்.

மயாங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து மயாங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹசில்வுட்

மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் மயாங்க் அகர்வால் 96 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 112 பந்தில் 77 ரன்கள் சேர்த்த அவர், நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் - புஜாரா ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா சிறப்பாக விளையாடி 134 பந்தில் அரைசதம் அடித்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 61 ரன்களுடனும், விராட் கோலி 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


நாதன் லயன்

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஹசில்வுட் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரகானே 18 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் விராட் கோலி, ரகானே ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் விளையாடிய புஜாரா 199 பந்தில் சதமடித்தார். இந்த தொடரில் புஜாராவின் 3-வது சதம் இதுவாகும்.

புஜாராவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஹனுமா விஹாரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.


ஹனுமா விஹாரி

இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து இந்தியா விளையாடி 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், இந்த டெஸ்டில் பாதுகாப்பான நிலையை அடைந்துவிடும்.
Tags:    

Similar News