செய்திகள்

ரஞ்சி டிராபியில் குருணால் பாண்டியா அபாரம்: இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார்

Published On 2019-01-01 14:03 GMT   |   Update On 2019-01-01 14:03 GMT
ரஞ்சி டிராபியில் ரெயில்வேஸ் அணிக்கெதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, அணியை 164 ரன்னில் வெற்றி பெற வைத்தார். #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் பரோடா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெயில்வேஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். ஐந்தாவது வீரராக களம் இறங்கிய குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 160 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பரோடா அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. குருணால் பாண்டியாவின் (4 விக்கெட்) நேர்த்தியான பந்து வீச்சால் ரெயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 200 ரன்னில் சுருண்டது. 113 ரன்கள் முன்னிலையுடன் பரோடா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் பரோடா பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். ஆனால் குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடி 104 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பரோடோ 157 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ரெயில்வேஸ் அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ரெயில்வேஸ் அணி 2-வது இன்னிங்சில் 106 ரன்னில் சுருண்டது. இதனால் பரோடா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த குருணால் பாண்டியா, 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Tags:    

Similar News