செய்திகள்

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்

Published On 2018-12-11 20:33 GMT   |   Update On 2018-12-11 20:33 GMT
‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. #BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
குவாங்சோவ்:

‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறுவதற்கு சிந்து கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.

இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை சந்திக்கிறார்.#BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
Tags:    

Similar News