செய்திகள் (Tamil News)

ஐதராபாத் டெஸ்ட்- ஹோல்டரின் அபார பந்து வீச்சால் இந்தியா 367 ரன்னில் ஆல்அவுட்

Published On 2018-10-14 08:01 GMT   |   Update On 2018-10-14 08:01 GMT
ஐதராபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வேகப்பந்து வீச்சால் இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ரகானே 80 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை சந்தித்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹோல்டர் இந்தியாவின் ரன்குவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



அதன்பின் வந்த குல்தீப் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 92 ரன்னில் வெளியேறினார். இந்தியா இன்று காலையில் 31 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

கடைசி விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 ரன்கள் சேர்க்க இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா இன்று காலை 59 ரன்களுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News