செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தல் ஆட்டம்- அம்ப்ரிஸ் சதம் அடித்தார்

Published On 2018-10-01 13:54 GMT   |   Update On 2018-10-01 13:54 GMT
பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது.

இந்த பயிற்சி ஆட்டம் வதோதராவில் நேற்றுமுன்தினம் (செப்டம்பர் 29-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பிரசிடென்ட் லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த விஹாரி (3), கருண் நாயர் (29) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அங்கித் பவ்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரசிடென்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவ்னே 116 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. பிராத்வைட், பொவேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 52 ரன்களும், பொவேல் 44 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.



3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் கோப் 36 ரன்கள் சேர்த்தார். ஆனால் ஹெட்மையர் (7), சேஸ் (5)  ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். அதன்பின் வந்த டவ்ரிச் 65 ரன்கள் சேர்த்தார். அம்ப்ரிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

அம்ப்ரிஸ் 114 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் 89 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் என்பதால் பிரசிடென்ட் அணி 2-வது இன்னிங்சை விளையாட நேரமில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News