செய்திகள்

ஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆட்டத்தால் இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட்

Published On 2018-09-09 13:57 GMT   |   Update On 2018-09-09 13:57 GMT
புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜடேஜே உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை இந்தியா 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Tags:    

Similar News