செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி - லோகேஷ் ராகுல் அதிரடியில் இந்தியா வெற்றி

Published On 2018-07-04 01:43 IST   |   Update On 2018-07-04 08:02:00 IST
லோகேஷ் ராகுலின் அதிரடி, குல்தீப் யாதவின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #ENGvIND
லண்டன்:

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது, ஜேசன் ராய் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து இறங்கிய வீரர்களை குல்தீப் யாதவ் தனது சுழல் பந்தில் சீக்கிரமாக வெளியேற்றினார். இதனால் 107 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுக்ள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.



இதையடுத்து, 161 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரோகித் சர்மா இறங்கினர்.

தவான் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், அடுத்து இறங்கிய லோகேஷ் ராகுல் தனது அதிரடியை ஆரம்பித்தார். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி சதமடித்தார். லோகேஷ் ராகுல் 101 ரன்னுடனும், விராட் கோலி 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND #EnglandvIndia
Tags:    

Similar News