செய்திகள்

ஆல்-ரவுண்டராக புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

Published On 2018-06-08 01:08 GMT   |   Update On 2018-06-08 01:08 GMT
வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன், சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக 10000க்கும் அதிகமான ரன்களும், 500 விக்கெட்களும் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #ShakibAlHasan #BangladeshAllRounder

ஷகிப் அல் ஹசன் வங்காளதேச அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார், இவர் வங்காளதேச டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாகவும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். சிறப்பான பேட்டிங் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான பீல்டிங்கிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார்.

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர்களுல் ஒருவராக இவர் அறியப்படுகிறார். அனைத்து வகை கிரிக்கெட் வடிவங்களுக்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2015-ம் ஆண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் சகலத் துறையருக்கான சர்வதேச கிரிக்கெட் அவையின் தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் வங்காளதேச துடுப்பாட்ட வீரர் மற்றும் முதல் சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

சிறிது காலம் தரவரிசையில் பின்தங்கிய இவர் விரைவில் மீண்டும் முதலிடம் பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார். 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையில் இவரும் மகமதுல்லாவும் இணைந்து 209 பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வங்காளதேச இணை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையின் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் சேர்த்த இணை எனும் சாதனைகளைப் படைத்தனர்.



இந்நிலையில், ஷகிப் அல் ஹசன் புதிதாக ஒரு சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மிக வேகமாக 10000க்கும் அதிகமான ரன்களும், 500 விக்கெட்களும் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,594 ரன்களும், 188 விக்கெட்களும் எடுத்துள்ளார். 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5,243 ரன்களும், 235 விக்கெட்களும் எடுத்துள்ளார். மேலும் 63 டி20 போட்டிகளில் விளையாடி 1237 ரன்களும், 75 விக்கெட்களும் எடுத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஆல்-ரவுண்டர் தரவரிசையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்திலும், டி20 போட்டிகளில் 3-வது இடத்திலும் உள்ளார், ஷகிப் அல் ஹசன். #ShakibAlHasan #BangladeshAllRounder
Tags:    

Similar News