செய்திகள்

கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் பாராட்டு

Published On 2018-05-21 03:34 GMT   |   Update On 2018-05-21 03:49 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்களை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த கொல்கத்தா அணியின் பவுலர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் வெகுவாக பாராட்டினார்.#IPL2018 #KaneWilliamson
ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 8-வது வெற்றியுடன் (16 புள்ளி) 6-வது முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஐதராபாத் அணியின் ரன்வேகம், கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் தளர்ந்து போனது. இந்த இலக்கை கொல்கத்தா அணி கிறிஸ் லின் (55 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா (45 ரன்), சுனில் நரின் (29 ரன்) ஆகியோரின் அதிரடியின் துணையுடன் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 6-வது முறையாக ‘சேசிங்’கில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘டாப்-4 அணிகளில் ஒன்றாக போராடி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்’என்றார்.

ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. 200 ரன்களோ அதற்கு சற்று அதிகமாகவே எட்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அந்த ஸ்கோரை நாங்கள் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். இதுவரை நடந்தது பற்றி கவலையில்லை. ‘பிளே-ஆப்’ சுற்றில் வீரர்கள் சுதந்திரமாக, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார். #IPL2018 #KaneWilliamson
Tags:    

Similar News