ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Published On 2018-05-04 21:48 IST   |   Update On 2018-05-04 21:48:00 IST
இந்தூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 34-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ்க்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #KXIPvMI
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மைதானம் சிறியது என்பதாலும், ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டதாலும் இருவரும் ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கேஎல் ராகுல் முதல் இரண்டு ஓவர்களில் தலா ஒரு சிக்ஸ் பறக்கவிட்டார். மறுமுனையில் கிறிஸ் கெய்ல் ரன் அடிக்க திணறினார். 9 பந்தில் இரண்டு ரன்களே எடுத்திருந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 4-வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். 6-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி விரட்டினார்.

இரண்டு ஓவரில் கெய்ல் அதிரடி காட்டியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 7-வது ஓவரின் 4-வது பந்தில் கேஎல் ராகுல் டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து யுவராஜ் சிங் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய கிறிஸ் கெய்ல், 12-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து அரைசதம் அடித்தார். 38 பந்தில் அரைசதம் அடித்த கெய்ல், இதே ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11.4 ஓவரில் 88 ரன்கள் எடுத்திருந்தது. யுவராஜ் சிங் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.



4-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சார் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் 15 ஓவரில் 123 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 16-வது ஓவரில் கருண் நாயர் சிக்ஸ் ஒன்று அடித்தார். ஆனால் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அக்சார் பட்டேல் 17-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 180-ஐ நெருங்க வழியில்லாமல் போனது.

பென் கட்டிங் வீசிய 18-வது ஓவரில் மயாங்க் அகர்வால் ஒரு சிக்ஸ் அடிக்க பஞ்சாப் அணிக்கு 11 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். சிறப்பாக பந்து வீசிய பும்ரா 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பஞ்சாப் அணி 19 ஓவரில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.


கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் மார்கண்டே

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் பந்தை ஸ்டாய்னிஸ் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். 5-வது பந்தை ஸ்டாய்னிஸ் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட, கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 22 ரன்கள் விளாசி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Similar News