செய்திகள்

கோலியை விட பெரிய சிக்ஸ் அடிக்கும்போது, எதற்காக டயட்- 90 கிலோ எடை வீரர் கேட்கிறார்

Published On 2018-05-03 21:12 IST   |   Update On 2018-05-03 21:12:00 IST
விராட் கோலியை விட பெரிய சிக்ஸ் விளாசுகையில், அவரைப் போல் உணவுக் கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என ஆப்கான் வீரர் கேள்வி கேட்டுள்ளார். #viratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். கால்பந்து வீரர்கள் சிக்ஸ் பேக் உடலுடன் இருப்பதுபோல் விராட் கோலி உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் இப்படி இருப்பது அரிதான விஷயம். விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுபோல், இந்தியாவின் இளம் வீரர்களும் உடல் பராமரிப்பின் மீது கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் இருப்பவர் முகமது ஷேசாத். இவர் விராட் கோலியின் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டுக்கு நேர்எதிராக கொள்கை கொண்டவராக இருக்கிறார். 90 கிலோ எடையுள்ள ஷேசாத் விராட் கோலியை விட பெரிய சிக்சர்கள் விளாசும் நான், அவரைப் போல் உணவு கட்டுப்பாட்டை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



இதுகுறித்து முகமது ஷேசாத் கூறுகையில் ‘‘எனது உடல் பிட்னெஸிற்காக அதிக அளவில் பயிற்சி எடுக்கிறேன். ஆனால், எனது உணவு முறையில் என்னால் சமாதானம் செய்து கொள்ள முடியாது. நான் விராட் கோலியை போல் உடலை பிட்னெஸ் ஆக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது சாத்தியமில்லை. ஆனால், அதிக அளவில் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.

என்னால் விராட் கோலியை விட அதிக தூரத்திற்கு மிகப் பெரிய சிக்ஸ் விளாச முடியும். அப்படி இருக்கையில் அவரைப் போல் உணவுகட்டுப்பாட்டை நான் ஏன் கடைபிடிக்க வேண்டும்?’’ என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வரும் ஷேசாத், அந்த அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News