செய்திகள்

ஐதராபாத் அணியுடனான போட்டியில் கிரிக்கெட் விதியை மீறிய கிறிஸ் கெயில்

Published On 2018-04-27 11:13 GMT   |   Update On 2018-04-27 11:13 GMT
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலின் கையுறை (கிளவுஸ்), கிறிஸ் கெயில் போட்டுக் கொண்டு கிரிக்கெட் விதியை மீறியுள்ளார். #VIVOIPL #ChrisGayle #KXIP

ஐதராபாத்: 

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து, பஞ்சாப் அணி 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. ஆனால், ஐதராபாத் அணியினர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில், ஐதராபாத் அணி பேட்டிங் செய்த போது 6-வது ஓவரை பரிந்தர் ஸ்ரன் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் ஷகிப் அல் ஹசன் அவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ-பால் ஆகும். இதற்கிடையில் பஞ்சாப் அணி விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் டிரெஸ்ஸிங் ரூம் வரை சென்று வந்தார்.

அப்போது ராகுலின் விக்கெட் கீப்பிங் கையுறை (கிளவுஸ்), கிறிஸ் கெயில் எடுத்து கையில் மாட்டிக் கொண்டார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கெயில் தான் கீப்பிங் செய்யப்போகிறார் என நினைத்து ஆரவாரம் செய்தனர். பின்னர் தான் அவர் நகைச்சுவைக்காக கிளவுஸை அணிந்து கொண்டார் என்பது தெரிந்தது.

ஐசிசி கிரிக்கெட் 27.1-வது விதியின்படி விக்கெட் கீப்பரின் கிளவுஸை வேறு எந்த வீரரும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அதற்கு தண்டனையாக பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். ஆனால் நேற்றைய போட்டியின் போது இந்த விதிமுறையை நடுவர்கள் பின்பற்ற தவறிவிட்டனர்.

கடந்த மார்ச் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியின் போது, குயின்ஸ்லாந்து வீரர் ரென்ஷா விக்கெட் கீப்பரின் கிளவுஸை விளையாட்டுத் தனமாக அணிந்ததால் எதிரணிக்கு 5 ரன்கள் அபராத ரன்னாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #VIVOIPL #ChrisGayle #KXIP
Tags:    

Similar News