செய்திகள்

மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பிஎஸ்ஜி

Published On 2018-04-16 10:42 GMT   |   Update On 2018-04-16 10:42 GMT
லீக்-1 கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் மொனாகோவை 7-1 என துவம்சம் செய்து பிஎஸ்ஜி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. #PSG
இங்கிலாந்தில் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா தொடர் நடைபெறுவதுபோல் பிரான்சில் லீக்-1 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

2017-18 சீசனில் நடப்பு சாம்பியனான மோனாகோவிற்கும், தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. நேற்றிரவு இந்த இரண்டு அணிகளும் பலப்ரீட்சை நடத்தின. இதில் பிஎஸ்ஜி 7-1 என மொனாகோவை துவம்சம் செய்தது.

தொடக்கம் முதலே கவானி, டி மரியா சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் செல்சோ, 17-வது நிமிடத்தில் கவானி, 19-வது நிமிடத்தில் டி மரியா ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். 27-வது நிமிடத்தில் செல்சோ மேலும் ஒரு கோல் அடித்தார். மொனாகோ அணியின் லோபெஸ் 38-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பிஎஸ்ஜி 4-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.



2-வது பாதி நேரத்திலும் பிஎஸ்ஜி ஆதிக்கம் செலுத்தியது. டி மரியா 58-வது நிமிடத்திலும், பால்காயோ (ஓன்கோல்) 76-வது நிமிடத்திலும், டிராக்லெர் 86-வது நிமிடத்திலும் கோல் அடிக்க பிஎஸ்ஜி 7-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 33 போட்டியில் 28 வெற்றி, 3 டிரா, 2 தோல்வியுடன் 87 புள்ளிகள் பெற்றுள்ளது. மொனாகோ 33 போட்டியில் 21 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்றுள்ளது.



இன்னும் ஐந்து போட்டிகள் மீதமுள்ளன. ஐந்திலும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தோற்றாலும் 87 புள்ளிகள் பெற்றிருக்கும். மொனாகோ ஐந்து போட்டியிலும் வெற்றி பெற்றாலும் 85 புள்ளிகள்தான் பெறும். இதனால் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக்-1 சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.
Tags:    

Similar News