செய்திகள்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2018-03-31 18:06 IST   |   Update On 2018-03-31 18:06:00 IST
ஆஸ்திரேலியாவுக்கான நான்காவது டெஸ்ட் போட்டியில் மார்கிராம், பவுமா ஆகியோரின் அபார ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 488 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் 19 ரன்கள் எடுத்த நிலையில் 
ஆட்டமிழந்தார். அடுத்து மார்கிராம் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார். 

அம்லா 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அரை சதமடித்த டி வில்லியர்ஸ் 69 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மார்கிராம் ஒரு சிக்சர், 17 பவுண்டரியுடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரின் 4-வது சதமாகும். அவரை தொடர்ந்து இறங்கிய டு பிளஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரபாடா ரன் எடுக்காமலும், டி காக் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பவுமா பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல்
95 ரன்கள் எடுத்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 488 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், சாயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. #SAvAUS #Tamilnews

Similar News