செய்திகள்

பணப் பிரச்சினையால் உகாண்டாவில் தவித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள்

Published On 2017-12-22 15:23 IST   |   Update On 2017-12-22 15:23:00 IST
உகாண்டா கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 20 பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உள்ளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்று இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக 20 லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது தெரியவந்து.

இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதில் 50 சதவீத  தொகையையாவது சம்பளமாக தருமாறு உகாண்டா கிரிக்கெட் அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


யாசீர் ஹமீது

முதலில் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உகாண்டா கிரிக்கெட் அமைப்பு, பிறகு லீக் தொடரை நடத்த முன்வந்த ஸ்பான்சர்ஸ் பின்வாங்கியதாக கூறி ஊதியத்தை அளிக்க மறுத்துள்ளனர். இதனால், உகாண்டாவில் தவித்த வீரர்கள், சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினார்கள். ஆனால், ஒருங்கிணைப்பாளர்கள் பணம் கொடுக்காததால் டிக்கெட் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஹோட்லில் தங்கியுள்ளனர்.


இம்ரான் பர்ஹத்

பாகிஸ்தான் தூதரகம் வீரர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் பாகிஸ்தான் புறப்பட்டு விடுவோம் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கு இது மோசமான அனுபவம் எனவும், பணம் சம்பாதிக்க வந்த நாங்கள், எங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News