செய்திகள்

நியூசிலாந்திடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது கோலி பாய்ச்சல்

Published On 2017-11-05 11:12 IST   |   Update On 2017-11-05 14:11:00 IST
பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வியடைந்தோம் என்று நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்:

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 40 ரன்னில் தோற்றது.

ராஜ்கோட்டில் நடந்த இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முன்ரோ சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 109 ரன்னும் ( 7 பவுண்டரி, 7 சிக்சர்), குப்தில் 41 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன்னில் தோல்வி அடைந்தது.

கேப்டன் விராட் கோலி 42 பந்தில் 65 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 37 பந்தில் 49 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். போல்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:-



நியூசிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. அந்த அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது 235 முதல் 240 ரன்கள் வரை குவித்துவிடும் என்று கருதினேன்.

பும்ராவும், புவனேஷ்வர் குமாரும் நேர்த்தியாக பந்துவீசி அந்த அளவுக்கு கொண்டு செல்லவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

197 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எளிதானது தான். ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. மிகப்பெரிய இலக்கு தேவைப்படும் போது ஒரு பேட்ஸ்மேன் அல்லது அனைத்து பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட வேண்டும். பேட்ஸ்மேன்கள் அவ்வாறு செய்யாததால் தோற்றோம்.

நானும் மிகவும் சிறப்பாக ஆட முயற்சித்தேன். டோனியும் கடைசி வரை நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் தேவையான ரன்ரேட் அதிகமாகி விட்டதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது:-



கடந்த போட்டியில் இருந்து எங்களது ஆட்டம் நன்றாக மேம்பட்டு உள்ளது. முன்ரோ சதம் அடித்தது சிறப்பானது. அவருக்கு குப்திலும், புருசும் உதவியாக இருந்தனர். எங்களது பந்துவீச்சும் மிகவும் அபாரமாக இருந்தது. கடைசி போட்டியிலும் இதே மாதிரி விளையாடினால் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்று விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது .

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

Similar News