செய்திகள்

வங்காள தேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா 369 ரன்கள் குவிப்பு

Published On 2017-10-22 12:47 GMT   |   Update On 2017-10-22 12:47 GMT
வங்காள தேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்று வருகிறது. தொடக்க வீரர்களாக பவுமா, டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 17.5 ஓவரில் 119 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பவுமா 47 பந்தில் 5 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து அரைசதத்தை கோட்டைவிட்டார்.


அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த மார்கிராம்

மறுமுனையில் விளையாடிய டி காக் 68 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸ், மார்கிராம் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மார்கிராம் தனது அறிமுக போட்டியில் 66 ரன்கள் சேர்த்தார். டு பிளிசிஸ் 67 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.


காயம் அடைந்த டு பிளிசிஸ் மைதானத்தில் இருந்து வெளியேறும் காட்சி

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 20 ரன்னும், பெஹார்டியன் அவுட்டாகாமல் 33 ரன்களும் எடுக்க தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்தது. பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News