செய்திகள்

ஆஸ்திரேலியாவுடன் 2-வது டெஸ்ட்: நாதன் லயோனின் துல்லியமான பந்துவீச்சில் வங்கதேசம் திணறல்

Published On 2017-09-04 19:49 IST   |   Update On 2017-09-04 19:49:00 IST
ஆஸ்திரேலியாவுடனான கடைசி மற்றும் 2-வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் வங்காள தேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்டகாங் :

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் சவும்யா சர்க்கார் களமிறங்கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயோனின் துல்லியமான பந்துவீச்சால் வங்காள தேச அணியினர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 117 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியினர் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தனர்.



இதையடுத்து களமிறங்கிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் சபீர் ரகுமான் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தனர். 66 ரன்கள் எடுத்த நிலையில் சபீர் ரகுமான் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 222 ரன்களாக இருந்தது. இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேச அணியினர் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளனர். முஷ்பிகுர் ரஹிம் 62 ரன்களும், நாசர் உசேன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயோன் சிறப்பாக பந்துவீசி 77 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆஷ்டன் அஹர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

நாளை இரண்டாவது நாளில் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News