செய்திகள்

4-வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி

Published On 2017-08-31 19:31 IST   |   Update On 2017-08-31 19:31:00 IST
இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவித்தது.
கொழும்பு:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். இலங்கை வீரர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே தவான் 6 ரன்னில் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். முதலில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 96 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடித்து 131 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ரோகித் சர்மா 88 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து 219 ரன்கள் குவித்தனர்.

அதன்பின்னர் களமிறங்கிய பாண்டியா, ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் டோனி 49, மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுக்க முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது.

இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டும், மலிங்கா, பெர்னான்டோ, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதை தொடர்ந்து, இலங்கை அணியினர் 376 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகின்றனர்.

Similar News