செய்திகள்

டாக்கா டெஸ்ட்: ஆஸி. வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

Published On 2017-08-29 15:40 IST   |   Update On 2017-08-29 15:40:00 IST
தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹிமின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காள தேசம், முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தமீம் இக்பால் 71 ரன்னும், சாஹிப் அல் ஹசன் 84 ரன்னும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ், லயன் மற்றும் அகர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.


முஷ்பிகுர் ரஹிம் ரன்அவுட் ஆகிய காட்சி

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 217 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ரென்ஷா 45 ரன்னும், அகர் 41 ரன்னும் எடுத்தனர். சாஹிப் அல் ஹசன் 5 விக்கெட்டும், மெஹெதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


மெஹெதி ஹசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. தமீம் இக்பால் 30 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் லயன் சிறப்பாக பந்து வீசினார். தைஜுல் இஸ்லாம் (4), இம்ருல் கெய்ஸ் (2) ஆகியோரை லயன் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அடுத்து தமீம் இக்பால் உடன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தமீம் இக்பால் 78 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.


6 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன்

சாஹிப் அல் ஹசன் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சபீர் ரஹ்மான் 22 ரன்னும், மெஹெதி ஹசன் மிராஸ் 26 ரன்னும் எடுக்க, வங்காள தேசம் 79.3 ஓவரில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

முதல் இன்னிங்சில் 43 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 264 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்து வருவதால் வங்காள தேசம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Similar News