செய்திகள்

இலங்கைக்கு எதிராக நாளை 3-வது ஒரு நாள் போட்டி: இந்தியா தொடரை வெல்லுமா?

Published On 2017-08-26 13:13 IST   |   Update On 2017-08-26 13:13:00 IST
இலங்கை அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பல்லேகலே:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 டெஸ்டிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப்போட்டியிலும் வெற்றியை பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆட்டத்தில் இந்திய தோல்வியில் இருந்து தப்பி டோனி-புவனேஷ்வர் குமாரின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ரோகித்சர்மா, தவான் ஆகியோர் சிறப்பாக ஆடியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கோட்டைவிட்டனர். 8-வது விக்கெட் ஜோடி சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். இதனால் நாளைய ஆட்டத்தில் வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியமான தாகும்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி வெற்றியை நீட்டிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இலங்கை அணிக்கு நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்க வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததை கோட்டைவிட்டது. 7 விக்கெட்டை எளிதில் கைப்பற்றிய அந்த அணி வீரர்களால் எஞ்சிய 3 விக்கெட்டை எடுக்க முடியாமல் போனது ஏமாற்றமே.

தடை காரணமாக இலங்கை கேப்டன் தரங்கா மற்றும் குணதிலகா ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக சன்டிமால், திரிமானே அழைக்கப்பட்டுள்ளனர். கபுகேத்தரா கேப்டனாக செயல்படுவார்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, டோனி, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ரகானே, பும்ரா, யதவேந்திர சஹல், மனிஷ்பாண்டே, ஷாகல் தாகூர்.

இலங்கை: கபுகேத்தரா (கேப்டன்), சன்டிமால், திரிமானே, மேத்யூஸ், டிக்வெல்லா, குஷால் மென்டீஸ், மிலின்டா ஸ்ரீவர்த்தனா, புஷ்பக்குமாரா, தனஞ்செயா, சமீரா, ஹசரன்கா, விஷ்வா பெர்னாண்டோ, மலிங்கா, திசரா பெரேரா, சன்டகன்.

Similar News