செய்திகள்

4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலக சாதனையை முறியடித்தது அமெரிக்கா

Published On 2017-07-26 19:26 IST   |   Update On 2017-07-26 19:26:00 IST
அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் அணி, 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது.
புடாபெஸ்ட்:

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு வகையான நீச்சல் போட்டிகளை (பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, ஃப்ரீஸ்டைல்) உள்ளடக்கிய மெட்லி போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது.

இதில் ஆடவருக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி வாரல் மற்றும் மல்லோய் கோமர்போர்ட் ஆகியோர் கொண்ட அணி 4x100 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளது. இந்த அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள், 40.28 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்பு 2015ம் ஆண்டு பிரிட்டன் அணி, ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் 3 நிமிடம் 41.71 வினாடிகளில் கடந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அமெரிக்க அணி இன்று முறியடித்துள்ளது. இத்துடன் சேர்த்து இந்த ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டியில், 6 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு மெட்லி போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சேர்க்கப்பட்டது. 2020 ஒலிம்பிக் போட்டியிலும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News