செய்திகள்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: இலங்கைக்கு தேவை 218 ரன்; ஜிம்பாப்வேவுக்கு 7 விக்கெட்

Published On 2017-07-17 16:44 GMT   |   Update On 2017-07-17 16:44 GMT
பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட் உள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 218 ரன்கள் தேவைப்படுகிறது. ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும்.
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னி்ங்சை தொடங்கிய இலங்கை 346 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 377 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

ஒட்டுமொத்தமாக இலங்கையை விட 387 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக குணரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் களம் இறங்கினார்கள். தரங்கா 27 ரன்னிலும், குணரத்னே 48 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சண்டிமல் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.


சண்டிமல் கேட்ச் ஆன காட்சி

4-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணிக்கு நாளை கடைசி நாளில் 218 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் மீதமுள்ளது. நாளை காலை உணவு இடைவேளைக்குள் ஜிம்பாப்வே அணி விரைவாக விக்கெட்டுக்கள்  வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையெனில் இலங்கை அணி 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News