செய்திகள்

2011 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி: விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல்

Published On 2017-07-14 21:58 IST   |   Update On 2017-07-14 21:58:00 IST
2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறித்து விசரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா வலியுறுத்தி உள்ளார்.
கொழும்பு:

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் 18 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் இலங்கை அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டது. இதனால், இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.



அந்த வீடியோவில் தோன்றி பேசும் ரணதுங்கா, ‘வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நானும் இந்தியாவில் வர்ணனையாளராக இருந்தேன். நாம் தோல்வி அடைந்தபோது வேதனைப்பட்டேன். அத்துடன் எனக்கு சந்தேகமும் எழுந்தது. போட்டியில் என்ன நடந்தது என்பதை நாம் விசாரணை நடத்த வேண்டும்.

எல்லாவற்றையும் இப்போது என்னால் வெளியிட முடியாது. ஆனால் ஒருநாள் வெளியிடுவேன். எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும். வீரர்கள் தங்கள் சுத்தமான ஆடைகளால் உள்ளே இருக்கும் அழுக்கை மறைக்க முடியாது’ என யாரையும் குறிப்பிடாமல் பேசினார்.

அவரது இந்த பேஸ்புக் வீடியோ இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News