செய்திகள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது வங்காள தேசம்

Published On 2017-04-06 23:40 IST   |   Update On 2017-04-06 23:40:00 IST
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்காள தேச அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்காள தேச அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேச  அணி கேப்டன் மோர்தசா பேட்டிங் தேர்வு செய்தார்.  இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இதனால் வங்காள தேசம் அணி 4.5 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.

பின்வரிசை வீரர்களான சபீர் ரஹ்மான், சாஹிப் அல்ஹசன் ஆகியோரும் அதிரடியாக விளையாடினார்கள். 14-வது ஓவரின் முதல் பந்தில் சபீர் ரஹ்மான் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வங்காள தேசத்தின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. சபீர் ரஹ்மான் அவுட்டாகும்போது வங்காள தேசம் 13.1 ஓவரில் 124 ரன்கள் எடுத்திருந்தது.

சாஹிப் அல்ஹசன் 38 ரன்னிலும், மொசாடெக் ஹொசைன் 17 ரன்னிலும் வெளியேற, 19 ஓவரில் மலிங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வங்காள தேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரேரா மற்றும் முனவீரா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கபுகேந்திரா மட்டும் நிதானமாக விளையாடி 50 ரன்களை எட்டினார். வங்கதேச வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமனானது. மேலும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்காள தேச அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News