செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 314 ரன்னில் ஆல்-அவுட்

Published On 2017-03-26 07:25 GMT   |   Update On 2017-03-26 07:25 GMT
ஹாமில்டனில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 314 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் அனது.
ஹாமில்டன்:

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 41 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து இருந்தபோது மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் டு பிளிஸிசில் 53 ரன்னும், பவுமா 29 ரன்னிலும் அவுட் ஆனார்கள். மறுமுனையில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தாலும் குயிண்டான் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 118 பந்தில் 90 ரன் எடுத்து அவுட் ஆனார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 89.2 ஓவரில் 314 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை நியூசிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்களாக லாதம், ஜீத் ராவல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் 2-வது நாள் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.




இதனால் நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 25.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது. லாதம் 42 ரன்னுடனும், ராவல் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை நியூசிலாந்து 247 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் முழுவதும் நிலைத்து நின்று விளையாடினால் நியூசிலாந்து வெற்றி பெற முயற்சிக்கலாம்.

Similar News