செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெ.இண்டீசை 45 ரன் வித்தியாசத்தில் வீழத்தியது இங்கிலாந்து

Published On 2017-03-04 17:17 IST   |   Update On 2017-03-04 17:17:00 IST
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோர்கனின் சதத்தால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.


அரைசதம் அடித்த கார்டரை ரன்அவுட் செய்த பின்

3-வது விக்கெட்டுக்கு பில்லிங்ஸ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். பில்லிங்ஸ் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். மோர்கன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 116 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 107 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.


அரைசதம் அடித்த மொகமது பந்தை விளாசும் காட்சி

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், மொயீன் அலி அவட்டாகாமல் 31 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது.


4 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்

297 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. அந்த அணியின் மொகமது, கார்டர் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முயற்சி செய்தனர். இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.2 ஓவரில் 251 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட் ஆகியோர் அதிகபட்சமாக தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பிளங்கெட்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Similar News