செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி: 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசி டோனி அசத்தல்

Published On 2017-02-26 12:23 GMT   |   Update On 2017-02-26 12:23 GMT
விஜய் ஹசாரே டிராபியில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்து விளாசிய டோனி, ஜார்கண்ட் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
மாநில அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கொண்ட விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு லீக்கில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின.

டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 57 ரன்கள் எடுப்பதற்குள் 6 வி்க்கெட்டுக்களை இழந்து திணறியது. 7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் நதீம் ஜோடி சேர்ந்தார். ஒருபக்கம் நதீமை வைத்துக் கொண்டு டோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நதீம் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

டோனி 107 பந்தில் 129 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும். டோனியின் சதத்தால் ஜார்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது.



பின்னர் 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களம் இறங்கியது. அந்த அணி 38.4 ஓவரில் 165 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்அவுட் ஆனது. இதனால் டோனி அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வருண் ஆரோன், நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

மற்ற போட்டிகளில் உத்தர பிரதேசத்தை தமிழ்நாடும், ராஜஸ்தானை மும்பையும், கேரளாவை மகாராஷ்டிராவும், சர்வீசஸ் அணியை கர்நாடகாவும், சவுராஷ்டிராவை ஐதராபாத் அணியும், ஹரியானாவை ரெயில்வேஸ் அணியும், கோவாவை குஜராத் அணியும், டெல்லியை இமாச்சல் பிரதேச அணியும், பரோடாவை விதிர்பா அணியும், மத்திய பிரதேசத்தை ஆந்திராவும் வீழ்த்தியுள்ளது.

Similar News