செய்திகள்

புனே தூக்கினால் என்ன?: டோனியை கேப்டனாக்கியது ஜார்கண்ட் அணி

Published On 2017-02-21 15:00 GMT   |   Update On 2017-02-21 15:00 GMT
மாநில அணிகளுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான ஜார்கண்ட் அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இங்கிலாந்து தொடரின்போது தனது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும், ஐ.பி.எல். போன்ற அணிகளில் கேப்டனாக நீடிப்பேன் என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கும்வரை தொடர்ந்து கேப்டனாக நீடித்தவர் டோனி. அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.



திடீரென இரண்டு நாட்களுக்கு முன் அந்த அணி நிர்வாகம் டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது. இதனால் டோனி ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். முகமது அசாருதீனும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் 25-ந்தேதி தொடங்கும் மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி தொடருக்கான ஜார்கண்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. அம்மாநில கிரிக்கெட் வாரியம் டோனியை கேப்டனாக நியமித்துள்ளது. இதன்மூலம் புனே அணியில் நீக்கினால் என்ன? எங்கள் மாநில கேப்டனை விடமாட்டோம் என ஜார்கண்ட் அணி அவரை கேப்டனாக நியமித்து, டோனியின் கேப்டன் பயணத்தை நீட்டித்துள்ளது.

Similar News