செய்திகள்

ஐ.பி.எல். ஏலத்தில் 76 வீரர்கள் தேர்வு

Published On 2017-02-04 12:18 IST   |   Update On 2017-02-04 12:18:00 IST
750 வீரர்கள் ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதில் இருந்து 28 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 76 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.
புதுடெல்லி:

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. மே 21-ந்தேதிவரை இந்தப் போட்டி நடக்கிறது. தொடக்க போட்டி மற்றும் இறுதி ஆட்டம் ஐதராபாத்தில் நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 20-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. இந்த ஏலம் இன்று நடைபெறுவதாக இருந்தது. கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வீரர்கள் ஏலம் 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் நேற்று ஆகும். 750 வீரர்கள் ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதில் இருந்து 28 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 76 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.

வீரர்களை தேர்வு செய்ய மொத்தம் ரூ.143.33 கோடியை செலவழிக்கலாம். இதில் பஞ்சாப் அணி தான் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.23.35 கோடி செலவிடலாம். அந்த 5 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 17 பேரை தேர்வு செய்யலாம்.

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள், தக்க வைப்பு விடுவிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. 8 அணிகளிடம் சேர்த்து 44 வெளிநாட்டினர். உள்பட 140 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். ஸ்டெய்ன், பீட்டர்சன், உள்பட 63 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு அணியும் 9 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 27 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதற்காக அணிகள் தலா ரூ.66 கோடி வரை அதிகபட்சமாக செலவு செய்ய முடியும்.

Similar News