செய்திகள்

தமிம் - மொமினுல் முயற்சிகளை வீணடித்த மழை: நியூசிலாந்து டெஸ்ட்டில் வங்காளதேசம் 154/3

Published On 2017-01-12 08:07 GMT   |   Update On 2017-01-12 08:07 GMT
நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர்கள் தமிம் இக்பால், மொமினுல் சிறப்பாக விளையாடியபோதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகள் எடுபடாமல் போனது.
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்ய, வங்காளதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் இம்ருல் கயஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

தமிம் இக்பால் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொகமதுல்லா 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இன்றைய போட்டியின்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் பல ஓவர்கள் பாதிக்கப்பட்டன. இறுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் 40.2 ஓவர்களில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 64 ரன்னுடனும், சாகிப்-அல்-அசன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News