செய்திகள்

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்

Published On 2017-01-01 15:52 IST   |   Update On 2017-01-01 15:52:00 IST
இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்தேதியும், 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது.

23-ந்தேதி ஆஸ்திரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்தேதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்தேதி இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அணி வருவதற்கு வாய்ப்பில்லை.

இதனால் டி20 அணிக்கு முற்றிலும் மாறுபட்ட அணியை ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்துள்ளது. முதன்மை அணி இந்தியாவிற்கு வந்து விடும். அந்த அணியோடு பயி்ற்சியாளர் டேரன் லீமென் மற்றும் துணை பயிற்சியாளர்கள் இந்தியா வந்து விடுவார்கள்.

இதனால் இலங்கை அணிக்கெதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக லாங்கர், கில்லெஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் தலைசிறந்த வீரரான ரிக்கி பாண்டிங் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 27 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள அவர், மூன்று உலகக்கோப்பை வாங்கிய ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News